ரெயில்வே மேம்பால பணி தாமதம்- திமுகவினர் ரெயில் மறியல்


செப்டம்பர் 28, 2018
வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்
   
ரெயில்வே மேம்பால பணி தாமதம்- திமுகவினர் ரெயில் மறியல்
அரியூர் ரெயில்வே மேம்பால பணி தாமதம் ஏற்பட்டதால் இதனை கண்டித்து திமுகவினர் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் அடுத்த அரியூர் ரெயில்வே மேம்பால பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு கால வரையறைக்குள் முடிக்காமல் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலூரில் இருந்து ஸ்ரீபுரம் தங்க கோவில், ஊசூர், அணைக்கட்டு, ஒடுகத்தூர் செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், நோயாளிகள், அரசு ஊழியர்கள், தங்கக் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு மாற்று வழியாக உள்ள சித்தேரி ரெயில்வே மேம்பால தரைச்சாலையும் முறையாக பராமரிக்காமல் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.

மேலும் வேலூர் கஸ்பா பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கஸ்பா ரெயில்வே மேம்பாலம் பணியிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து அரியூர் ரெயில்வே கேட் அருகே இன்று வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் விழுப்புரம், காட்பாடி பாசஞ்சர் ரெயிலை மறித்து போராட்டத்தில ஈடுபட்டனர்.

கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வேலூர் மாநகராட்சி 4-வது மண்டல செயலாளர் அய்யப்பன் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

அரியூர் ரெயில்வே மேம்பால கட்டுமான பணியை நிறைவேற்ற வேண்டும்.

தற்போது அணைக்கட்டு பஸ்கள் செல்லும் சித்தேரி சாலையை சீரமைக்க வேண்டும், கஸ்பா ரெயில்வே மேம்பால பணிகளை தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அரியூர் போலீசார் மறியல் செய்த 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 200 பேரை கைது செய்தனர் வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

Comments