விசாரணைக்காக அழைத்து இன்ஸ்பெக்டர் மிரட்டியதால் வேன் டிரைவர் தற்கொலை

செப்டம்பர் 28, 2018
வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்
   
விசாரணைக்காக அழைத்து இன்ஸ்பெக்டர் மிரட்டியதால் வேன் டிரைவர் தற்கொலை
போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டியதால் வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்தவர் பழனி (வயது 35). வாடகை வேன் டிரைவரான இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் கொணவட்டத்தை சேர்ந்த சிலரை திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு வேனில் அழைத்து கொண்டு சென்றார்.

வேலூர்-ஆரணி சாலையில் கண்ணமங்கலம் அருகே அத்திமலைப்பட்டு என்ற பகுதியில் சென்றபோது வேன் எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 15 பேர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக, கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் பழனியை பிடித்து விசாரித்தனர். அப்போது, பழனியிடம் லைசென்ஸ் இல்லை. தொலைந்து போய் விட்டதாக அவர் கூறினார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் பழனியை மிரட்டியுள்ளார்.

‘என்ன செய்வியோ... லைசென்ஸ் கொண்டு வா’ என்று இன்ஸ்பெக்டர் எச்சரித்துள்ளார். டிரைவர் பழனி, வேலூரில் உள்ள வீட்டிற்கு வந்து லைசென்சை சல்லடை போட்டு தேடி உள்ளார். பிறகு லைசென்ஸ் கிடைக்காததால் சத்துவாச்சாரியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் சென்று முறையிட்டார்.

மீண்டும் எப்படி போலீஸ் நிலையம் செல்வது என்று அச்சப்பட்டு டிரைவர் பழனி நேற்றிரவு வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பழனியின் தற்கொலைக்கு காரணமான கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று காலை அவருடைய உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

Comments