முதல்வருக்கு போதிய பாதுகாப்பு வழங்காத போலீசாரிடம் விசாரணை


தமிழக முதல்வர், வேலூர் வந்த போது, போதிய பாதுகாப்பு வழங்காத, 22 போலீசாரிடம், எஸ்.பி., பிரவேஷ்குமார் விசாரணை நடத்தினார். .ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து, கடந்த, 25ல், வேலூர் மாவட்டம் வழியாக, தமிழக முதல்வர் பழனிசாமி, கார் மூலம் சேலம் சென்றார். வேலூர் காட்பாடி சில்க் மில்லில், முதல்வருக்கு, அ.தி.மு.க., வினர் வரவேற்பளித்தனர். அப்போது, காரில் இருந்து இறங்கிய முதல்வரை, தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர். 'முதல்வருக்கு, போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை, தொண்டர்களை, முதல்வரின் அருகே அனுமதித்தது தவறு' என்று, முதல்வரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த, 4 இன்ஸ்பெக்டர்கள் உட்பட, 22 போலீசாரிடம், வேலூர் மாவட்ட எஸ்.பி., பிரவேஷ்குமார், தனித்தனியாக விளக்கம் கேட்டார். ஆறு மணி நேரத்துக்கும் மேல் விசாரணை தொடர்ந்தது. 'விசாரணை விளக்க அறிக்கை தயாரிக்கப்பட்டு, முதல்வரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்களுக்கு, திருப்தி ஏற்படாத பட்சத்தில், போலீசார் மீது நடவடிக்கை பாயும்' என, போலீசார் கூறினர் வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

Comments