எல்லைக்குள் நுழைந்த பாக்., சிறுவன் ஒப்படைப்பு


ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தான் சிறுவனுக்கு, புதிய ஆடைகள், இனிப்புகள், விளையாட்டுப் பொருட்களை வழங்கி, நம் ராணுவ வீரர்கள், பத்திரமாக, பாக்., அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள, டேக்வார் எல்லை பகுதி வழியாக, ஜூன், 24ல், பாகிஸ்தானைச் சேர்ந்த, முகமது அப்துல்லா, 11, என்ற சிறுவன், தவறுதலாக நம் எல்லைக்குள் நுழைந்து விட்டான். சிறுவனைப் பிடித்த பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசிடம் ஒப்படைத்தனர்.

முகமது அப்துல்லாவிடம் விசாரித்ததில், தவறுதலாக அவன் எல்லைக்குள் நுழைந்தது தெரிய வந்தது. இதையடுத்து, முகமது அப்துல்லாவை, மீண்டும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்க தேவையான ஏற்பாடுகளை, போலீசார் செய்தனர். சிறுவன் என்பதால், மனிதநேய அடிப்படையில் கைது செய்யவில்லை.

சட்ட நடைமுறைகள் முடிவடைந்ததை அடுத்து, நான்கு நாட்களுக்கு பின், நேற்று முகமது அப்துல்லாவை, பாகிஸ்தான் அதிகாரிகளிடம், நம் ராணுவத்தினர் ஒப்படைத்தனர். புதிய ஆடைகள், இனிப்புகள், விளையாட்டுப் பொருட்களை வாங்கி, அந்தச் சிறுவனிடம் கொடுத்து, மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தனர்.

Image result for எல்லைக்குள் நுழைந்த பாக்., சிறுவன் ஒப்படைப்பு

Comments