தீவிரவாதிகள் பற்றி ஐநா அதிர்ச்சி தகவல் : தற்கொலை தாக்குதலுக்கு பாக். குழந்தைகள் தேர்வு
நியூயார்க்: தற்கொலை தாக்குதல்களை நடத்துவதற்காகவே பாகிஸ்தானிய குழந்தைகளை தீவிரவாத அமைப்புகள் தேர்ந்தெடுப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் குழந்தைகளும் போர்க்கருவி கலகங்களும்’ என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபை கடந்த ஆண்டு ஜனவரி - டிசம்பர் வரையிலான காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்த ஆண்டறிக்கையை ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டர்ஸ் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தற்கொலை படை தாக்குதல்களை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான வீடியோக்களை பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல்களை நடத்துவதற்காக அந்த நாட்டில் தீவிரவாத அமைப்புகள் சிறுவர்களை தேர்வு செய்துவருகின்றன. குறிப்பாக மதரசா உள்ளிட்ட இடங்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை தீவிரவாத அமைப்புகள் தற்கொலை தாக்குதல்களுக்கு பயன்படுத்துகின்றன. கடந்த ஆண்டு பிப்ரவரியில் சிந்து மாகாணத்தின் சேவான் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிக்கூடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட 8 தாக்குதல்களில், 4 தாக்குதல்கள் பெண் கல்வியை எதிர்த்து நடத்தப்பட்டுள்ளன. கடந்த மார்ச்சில் கில்ஜித் பலுசிஸ்தானில் உள்ள ஆக்ஸ்போர்ட் பொதுப்பள்ளியில் தனிநபர் நடத்திய தாக்குதலில் பள்ளி தீக்கிரையாகியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுச்செயலாளர் கட்டர்ஸ் கூறுகையில், `‘தீவிரவாத அமைப்புகள் தொடர்ந்து பள்ளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவது கவலையளிக்கிறது. பாகிஸ்தான் அரசு எதிர்க்காலத்தில் இதுபோன்ற தாக்குதல் நடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Comments
Post a Comment
Thank you