*வேலூர் மாவட்டத்தில் 3,000 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு: அதிர்ச்சி தகவல்*


பதிவு செய்த நாள்: மார் 22,2018 07:52

வேலூர்: ''வேலூர் மாவட்டத்தில், கடந்த, ஆறு ஆண்டுகளில், மூன்றாயிரம் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்,'' என்று, இன்டர்நேஷனல் ஜஸ்டீஸ் மிஷன் என்ற தனியார் நிறுவனத்தின் பயிற்சியாளர் தேவசித்தம் பேசினார்.
சென்னை, இன்டர்நேஷனல் ஜஸ்டீஸ் மிஷன் என்ற, தனியார் நிறுவனத்தின், செயல்பாடுகள் குறித்த, விளக்க கூட்டம், வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்தது. பி.ஆர்.ஓ., இளங்கோவன் தலைமை வகித்தார். தனியார் நிறுவன பயிற்சியாளர் தேவசித்தம் பேசியதாவது: வேலூர் மாவட்டத்தில், கடந்த, ஆறு ஆண்டுகளில், மூன்றாயிரம் குழந்தை தொழிலாளர்கள், அரசு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர். குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டவுடன், அவர்களது மேம்பாட்டிற்காக, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், குழந்தை தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில், திருவள்ளூர் முதலிடத்திலும், காஞ்சிபுரம் இரண்டாவதாகவும், திருவண்ணாமலை மூன்றாவதாகவும், வேலூர் நான்காவதாகவும், உள்ளன.இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, அரக்கோணத்தில், மரம் வெட்டும் தொழிலில், 10 ஆண்டுகளாக, கொத்தடிமையாக பணியாற்றி, மீட்கப்பட்ட கவுரி பேசினார்.

Comments